
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பேரவை வழக்குத் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்திற்கு எதிராக உச்ச நிதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக சட்டத்தரணிகள் பேரவையின் அழைப்பாளர் கபில கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டுவோர் அரசியல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதாக வாக்களிக்க வேண்டியது அவசியமானது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் அரசியல் அமைப்பிற்கு புறம்பானது. தனி இராச்சிய கோரிக்கையை முதனிலைப்படுத்தி கூட்டமைப்பு கொள்கைப் பிரடகனத்தை வெளியிட்டுள்ளது.
சுயாட்சி அதிகாரம் வடக்கு கிழக்கு மீள இணைவு உள்ளிட்ட பல்வேறு அரசியலமைப்பிற்கு முரணான விடயங்கள் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றியீட்டினால் வடக்கு மாகாண மக்களின் ஆணையை சர்வதேச சமூகத்திற்குக் காண்பித்து தனி இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களை கூட்டமைப்பு மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செத்சிறி பாயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





