வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு அமைச்சர் சத்தியலிங்கத்தால் குடிநீர் இயந்திரம்!!

336

 
சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் “சுத்தமான குடிநீரை சிறுவயதிலிருந்தே பருகுவோம்” செயற்திட்டத்தின்கீழ் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்குமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கத்தால் நேற்று முன்தினம் (02.12.2016) மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

உலகளாவிய ரீ தியில் நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக்காலமாக இலங்கையில் சிறுநீரக நோயின் தாக்கத்தினால் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.

இலங்கையில் அதிகமாக நாட்பட்ட சிறுநீரக நோயின் பாதிப்புடையோர் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. அதிலும் மாகாணத்தில் வவுனியா மாவட்டம் முதன்மையான மாவட்டமாக காணப்படுகின்றது.

நாட்பட்ட சிறுநீரக நோயின் தாக்கத்திற்கான காரணம் மருத்துவரீதியில் சரியாக கண்டறியப்படாவிடினும் குடிநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகமாக காணப்படுவதும் ஒருகாரணமாக கருதப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் சிறுவயதிலிருந்தே சுத்தமான குடிநீரை பருகுவோம் எனும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைகளில் இவ்வாறான குடிநீர் வடிகட்டும் இயந்திர தொகுதிகளை பொருத்துவதன்மூலம் வடிகட்டிய சுத்தமான குடிநீரை மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே வழங்குவதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

கடந்த ஆறுமாதங்களில் வவுனியா மாவட்டத்தில் ஏழு பாடசாலைகளுக்ககு இவ்வாறான குடிநீர் இயந்தித்தொகுதிகள் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கான குடிநீர்வடிகட்டும் இயந்திரத்திற்கு கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பான “இமை பவுன்டேசன்” நிதியுதவி வழங்கியுள்ளது.

பாடசாலை அதிபர் திரு.சுபாஸ்க்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா வடக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.சிறீஸ்கந்தராஜா, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

1 img_7463 img_7468 img_7470 unnamed