
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த 4 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை போராட்ட பந்தலில் நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்களும், போராட்டக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
இதையொட்டி காலை 10 மணி அளவில் 4 பேர் உருவப் படங்களுக்கும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மௌன ஊர்வலமும் நடைபெற்றது. இடிந்தகரை, கூடங்குளம், விஜயாபதி கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் நடந்த கூட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருடைய மனைவி கயல்விழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசும்போது 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் இங்கு போராடி வருகிறார்கள். தரமற்ற உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்.
வாழ்வாதாரத்துக்காக போராடியதற்காக மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.





