வவுனியாவில் சிற்றூழியர் போராட்டம் : நியமனத்துக்கு அமைச்சர் உத்தரவாதம்

511

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்திருக்கிறார்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய திணைக்களங்களில் சிற்றூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் நடைபெறவிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா நகரசபை மண்டபம் வரையில் பேரணியாகச் சென்றனர்.

அங்கு நுழைவாயிலில் வைத்து அவர்களை வழி மறித்த பொலிசார் அவர்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, தகுதியுள்ளவர்கள் என்று நேர்முகப் பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அமைச்சரிடம் இந்தப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் உறுதியளித்து அதற்கு ஆதாரமாக வடமாகாண ஆளுனருக்குப் பெயர் விபரங்களுடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வழங்கியிருப்பதாக அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகிய நடேசன் பார்த்திபன் தெரிவித்தார்.

vavunia_protest