
இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அடைப்பால், வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாயினர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்க கடலில் நீடிப்பதை அடுத்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் அதனால் சில நாட்கள் மழை பெய்தது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயில் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் காற்று சுழற்சி உருவானது.
அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. அந்த காற்றழுத்தம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டது. இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
நேற்று பகல் முழுவதும் லேசான மழை தூறிக் கொண்டே இருந்தது. சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மட்டும் இயங்கின.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அடைக்கப்பட்ட நிலையில் தெருக்களில் ஓடும் வெள்ளம் வீடுகளில் புகுந்தது. வட சென்னை மட்டுமின்றி, தென் சென்னையில் பல இடங்களில் இந்த நிலை காணப்பட்டது. ஏழை மக்கள்,வீடுகளை விட்டு வெளியேறவும் முடியாமல் உள்ளேயும் இருக்க முடியாமல் தவித்தனர்.
மாநகராட்சி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்யாத நிலையில், தெருக்களில் வடிகால் கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழை நீர் வெள்ளமாய் வீடுகளை சூழ்ந்தது. ஒரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால் வரும் நாட்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் கவலை தெரிவித்தனர். சென்னை நகரில் 120 மிமீ மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சோளிங்கர், கேளம்பாக்கம் 110 மிமீ, பள்ளிப்பட்டு 100 மிமீ, அரக்கோணம், தாம்பரம், செம்பரம்பாக்கம், வட சென்னை 90 மிமீ, சென்னை விமான நிலையம், திருவாலங்காடு 80 மிமீ, பூந்தமல்லி, பூண்டி, ஏற்காடு 70மிமீ, ஆரணி, காஞ்சிபுரம் 60மிமீ, வாலாஜா, சோழவரம், திருவள்ளூர், வேலூர்50 மிமீ, முத்துப்பேட்டை, ஓமலூர்,குடியாத்தம், வந்தவாசி40மிமீ, நாகப்பட்டினம்20 மிமீ, கோவை, திருவாரூர், தர்மபுரி, கரூர், சேலம், சிவகங்கை10 மிமீ மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக வட மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்கள், சுரங்கப்பாதைகள், புறநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது சென்னை அடுத்த திருமங்கலத்தில் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தார். திருத்தணியில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் இறந்தார்.
மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதால் இன்றும், நாளையும் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
மேலும், கடலில் வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்று மணிக்கு 45 முதல்55 கிமீ வேகத்தில் வீசும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் இந்த காற்றின் பாதிப்பு அதிகமாக காணப்படும். இன்றும் நாளையும் மழை பெய்யும் என்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த காலாண்டு தேர்வுகள், கடைசி தேர்வுக்கு பின்னர் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.





