இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சம்பியன்!!

329

afkan

தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 8 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியன் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க வந்திருந்த ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் குழு தங்கள் அணி சம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா 16 லட்சம், அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இதனால் கூடுதல் உற்சாகத்துடன் ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஆப்கானிஸ்தான் அணி 8வது நிமிடத்தில் முதல் அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் முஸ்தபா ஆசாத்ஜோய் கோல் போட்டார்.

அனுபவம் வாய்ந்த வழக்கமான இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. பயிற்சியாளர் கோவர்மானின் இந்த பரிசோதனை முயற்சி இந்தியாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கவில்லை.

இதன் பின்னர் 60வது நிமிடத்தில் மாற்று வீரராக ஆட வந்த சுனில் சேத்ரி, வந்த வேகத்தில் கோல் அடிக்க முயற்சித்தார். இருப்பினும் ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் தடுத்து விட்டார்.

63வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் 2வது கோல் போட்டது. சஞ்தர் அகமதி இந்த கோலை அடித்தார். அதே சமயம் இந்திய வீரர்களால் ஆப்கானிஸ்தானின் தடுப்பு அரணை உடைத்துக் கொண்டு கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

முடிவில் 139ம் நிலை அணியான ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 20 ஆண்டுகால தெற்காசிய கால்பந்து போட்டி வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும்.

2011ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 0-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இந்த முறை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்த ஆப்கானிஸ்தான் பயிற்சிளாளர் மற்றும் வீரர்கள் அதனை செய்து காட்டி விட்டனர்.

உலக தரவரிசையில் 145வது இடம் வகிக்கும் இந்திய அணி தெற்காசிய கால்பந்தில் 6 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த போதிலும் ஒரு முறையும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியதில்லை.