பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுப்பு!!

321

team

இந்தியாவில் விரைவில் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி பங்கேற்பதற்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21ம் திகதி முதல் அக்டோபர் 6ம் திகதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக வருகிற 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று போட்டிகள் மொகாலியில் நடக்கிறது. தகுதி சுற்றில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் (இந்தியா), ஒட்டகோ வோல்ட்ஸ் (நியூசிலாந்து), கந்துரட மரூன்ஸ்(இலங்கை) ஆகிய அணிகளுடன் பைசலாபாத் வோல்வ்ஸ் (பாகிஸ்தான்) அணியும் களம் இறங்க இருந்தது. தகுதி சுற்று முடிவில் இரு அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் அணி சம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் சமீப காலமாக சுமுகமான நிலை இல்லை.

இதையடுத்து கவனமாக பரிசீலித்து மிகுந்த முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பு கருதியும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா தென்ஆப்பிரிக்காவில் நடந்த போது பாகிஸ்தானை சேர்ந்த சியல்கோட் அணி கலந்து கொண்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த முறை அங்கு உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டத்தை வென்ற மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பைசலாபாத் அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் இப்போது மத்திய அரசு பாகிஸ்தான் அணியின் இந்திய வருகைக்கு தடை விதித்திருப்பதால், அதற்கு பதிலாக வேறு நாட்டு அணி சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுக்கு அழைக்கப்படும் என்று தெரிகிறது.