118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலமரம்!!

533

நாம் வாழும் இந்த உலகில் விசித்திரங்களுக்கும், வினோதங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை. உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்றும் ஒரு விசித்திர சம்பவம் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் இது சற்று வித்தியாசமான சம்பவம் என்றே கூறவேண்டும்.

“கைதுகள்” உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் கைதுசெய்வதை பார்த்திருக்கின்றோம், கேள்வியுற்றிருக்கின்றோம். ஆனால் ஒரு மரத்தை 118 வருடங்களாக கைது செய்து வைத்திருக்கும் விசித்திர சம்பவத்தை கேள்வியுற்றிருக்கின்றீர்களா?

கேட்பதற்கு நம்பமுடியாத விடயமாக இருந்தாலும் இது உண்மை. இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டமே “லண்டி கோட்டல்”. லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் 118 வருடங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்படி என்ன காரணத்திற்காக இந்த மரத்தை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றனர் என்று தெரிய வேண்டுமா. அதற்கும் அவர்கள் கூறும் பதில் விசித்திரமாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் .

குடிபோதையில் இருந்த இவர் “மரம் தன்னை நோக்கி வந்ததாக” கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அதிகாரி. அந்த மரத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அதை கைது செய்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பல காலங்கள் கடந்த பிறகும் கூட இன்றளவும் அந்த மரம் சங்கிலிகளைக் கொண்டு கட்டி வைத்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில், இந்த ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம். இதுதான் அந்த மரம் சிறைப்பிடிக்கப்பட்ட சோக கதை.

விசித்திரமான காரணத்தால் இந்த மரத்தை கைது செய்தமையால் இப்போது இந்த இடம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.