மீண்டும் அணு உலையை இயக்கியது வட கொரியா : அமெரிக்கா பரபரப்பு தகவல்!!

343

US

வட கொரியா தனது அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கான ஆதரமாக செயற்கை கோள் புகைப்படத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில் அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் எனப்படும் நவீன சர்வதேச ஆய்வு கழகம் கூறுகையில் ஆகஸ்ட் 31ம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரியவந்தது.

எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும் அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து சர்வதேச அணு சக்தி முகாமை இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்திற்கான செய்தி தொடர்பாளர் சர்வதேச விவகாரங்கள் குறித்து விளக்கம் அளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் வடகொரியாவின் அணு சக்தி திட்டம் தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 3 அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே யாங்பியான் அணு உலையை மீண்டும் இயக்கப் போவதாக வட கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.