இன்றும் கடும் காற்று மழை: கடலிற்குச் செல்வது பாதுகாப்பில்லை!

487

நாட்டில் மீன்பிடித் தொழிலை இன்றும் (09) மேற்கொள்ள முடியாது என இலங்கை காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடே யாழ்ப்பாணம், திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களின் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும்.

புத்தளத்திலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் இடையிடையே மழை பெய்யக் கூடும் எனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமற் போயுள்ளனர்.

காயமடைந்த 22 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (08) இரவு 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 318 குடும்பங்களைச் சேர்ந்த 1180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெய்வேந்திரமுனை, பலப்பிட்டி, காலி, பேருவளை, தெஹிவளை உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற பல மீனவப் படகுகள் காணாமல் போயுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான கால நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்கச் சென்று கடும் காற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரின் மூன்று கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பலப்பிட்டிய பிரதேசத்தில் 5 மீனவர்களும், கொழும்பில் 2 மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் காணப்படும் கொந்தளிப்புநிலை சற்றுக் குறைவடைந்ததும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையினருக்குச் சொந்தமான பல சிறிய படகுகள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடல்கொத்தளிப்பு தொடர்ந்தும் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பலப்பிட்டி பிரதேசத்தில் 5 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியதுடன், 15 முதல் 20 வரையான படகுகள் காணாமல் போயுள்ளன. நீரில் மூழ்கிய மூன்று மீனவர்களின் சடலங்கள் பேருவளைப் பகுதியில் கரையொதுங்கியதுடன், 5 மீனவர்கள் பலப்பிட்டியவில் கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவப் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி தெஹிவளைப் பிரதேச மீனவர்கள் நேற்றுக் காலை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தின் குறுக்கே மீன்பிடிப் படகை நிறுத்தி ரயிலை மறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தெய்வேந்திரமுனை பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற 8 படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

காலநிலை சீரடையும்வரை தெற்கு மற்றும் மேல் மாகாணத்திலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாமென எச்சரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.