மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு திருமணமான சில தினங்களில் கணவரொருவர் மனைவியை கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவானந்தம் மகன் ஜோர்ஜ் பிரபு (26). டிரைவர். இவருக்கும், அரியலூர் கருணாநிதி நகரை சேர்ந்த சின்னத்துரை மகள் பவிதா (21) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் திருமணம் நடந்துள்ளது.
சில நாட்கள் கணவன் மனைவி சந்தோஷமாக இருந்த நிலையில், மனைவியின் நடத்தையில் ஜோர்ஜ் பிரபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பவிதா கணவருடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 10ஆம் திகதி இரவு ஜோர்ஜ் பிரபு, மாமனார் சின்னத்துரைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பவிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் புள்ளம்பாடியிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதாகவும், உதவிக்கு வரும்படியும் அழைத்துள்ளார்.
அதற்கு சின்னத்துரை, தான் வெளியூரில் இருப்பதாகவும், மறுநாள் மாமியாரையும் அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சிறிதுநேரம் கழித்து சின்னத்துரை, மருமகனுக்கு தொடர்பு கொண்டு மகளின் உடல்நிலை குறித்து விசாரித்தபோது பவிதாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அருகேயுள்ள இருங்களூர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து நள்ளிரவில் சின்னதுரை போன் செய்தபோது ஜோர்ஜ் பிரபுவின் செல்போன் சுவிட்ச்ஓப் செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் போன் செய்தபோது தனியார் வைத்தியசாலை தாதியொருவர் செல்போனை எடுத்து இந்த போனில் பேசியவரின் மனைவி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரது மனைவி ஜெசிந்தா மேரி மற்றும் உறவினர்கள் கல்லக்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து கொலை செய்ததாக முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்பேரில் லால்குடி பொலிஸார் தனியார் வைத்திய சாலைக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோர்ஜ் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தியதில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் பவிதாவை ஜோர்ஜ் பிரபு அடித்து, துண்டால் கழுத்தை இறுக்கியதாகவும், மூச்சு திணறல் ஏற்பட்டதால் கழுத்து பகுதியில் வலி வந்ததாக கூறியதையொட்டி பவிதாவை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
ஆனால் அங்கு பவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தகராறில் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஜோர்ஜ் பிரபு விசாரணையில் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஜோர்ஜ் பிரபுவை கைதுசெய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர்.






