வவுனியா நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவும் : நகரசபைச் செயலாளர் வேண்டுகோள்!!

599

வவுனியாவில் வீதி ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் எமது நகரை சுத்தமாக வைத்திருக்க நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதி அருகே பொதுமக்கள் குப்பைகளை வீசி வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்று அப்பகுதியை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் சுத்தம் செய்துகொண்டிருக்கையில் நகரசபை செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா நகரை சுத்தமாக வைத்திருப்பது எமது கடமை அதேபோல நகரை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் வீட்டிலுள்ள குப்பைகளை வீட்டில் வைத்து எரிக்கலாம் அல்லது கிடங்கு வெட்டி புதைத்துவிடலாம், அல்லது நகரசபை கழிவகற்றும் வாகனம் வரும்போது அவற்றை ஒப்படைக்கலாம்.

மாறாக தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கொட்டுவதால் அப்பகுதியால் சென்றுவருபவர்களுக்கும், அயலில் உள்ளவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படுவதுடன், தண்ணீர் மற்றும் சூழல் மாசடைதல் போன்றன இடம்பெறுகின்றன.

எனவே பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைப் போட்டால் அதனை நகரசபை ஊழியர்கள் அகற்றுவார்கள். மாறாக வீதி ஓரங்களில், வாய்க்காலில் கொட்டுவதால் குப்பைகளை அகற்ற நகரசபை ஊழியர்கள் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

வவுனியா புதுக்குளம் செல்லும் வீதியிலுள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்கி இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். இப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

எனினும் நேற்று இப்பகுதி நகரசபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டபோதும் இன்று காலை மறுபடியும் குறித்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!