8 ஆண்டுகள் அடாத முயற்சியில் சொந்தமாக 1,000சிசி பைக்கை உருவாக்கிய குஜராத் இளைஞர்!!

439

1000CC மோட்டார்சைக்கிள் ஒன்றை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரித்தேஷ் என்ற இளைஞர் சொந்தமாக உருவாக்கி அசத்தி இருக்கிறார். இது லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கின்றது.

சூப்பர்பைக் என்பது எல்லா இளைஞர்களுக்கும் தீராத கனவாக உள்ளது. மில்லியன்களை தாண்டும் விலைதான் பெரும்பாலானோருக்கு அது பகல் கனவாகவே நீடிக்கிறது. ஆனால், இலக்கை நோக்கி தீரத்துடன் பயணித்தால் பணமும், தடைகளும் ஒரு பொருட்டல்ல என்பதை குஜராத்தை சேர்ந்த இளைஞர் ரித்தேஷ் வியாஸ் நிரூபித்துள்ளார்.

ஆம், எல்லா இளைஞர்களை போல ரித்தேஷுக்கு சூப்பர் பைக் வாங்குவது கனவாக இருந்துள்ளது. ஆனால், அது மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும், அதனை சொந்தமாக உருவாக்கவும் முடிவு செய்தார். இதன்மூலமாக, தன்னிடம் பணம் இருக்கும்போதெல்லாம் இந்த பைக்கிற்கான பாகங்களை வாங்கி உருவாக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு உதிரிபாகங்களாக சொந்தமாக தயாரித்தும், வாங்கி கோர்த்தும் இப்போது அதனை ஒரு முழுமையான கஸ்டமைஸ் சூப்பர் பைக் மொடலாக உருவாக்கி அசத்தி இருக்கின்றார்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லை. கடந்த 8 ஆண்டுகள் தொடர் முயற்சியில் தனது கனவு பைக்கை தயாரித்து முடித்து பிரம்மிக்க வைத்திருக்கிறார் ரித்தேஷ்.

சொந்த முயற்சியில் சாதாரணமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் 1,000 சிசி பைக் மொடல் என்ற பெருமையையும் இந்த பைக் பெற்றிருக்கிறது. இந்த சாதனை லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்து இருக்கின்றது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புகழ்பெற்ற சாப்பர் ரக மோட்டார்சைக்கிளாக இதனை உருவாக்கி இருக்கிறார். மிக நீளமான முன்னோக்கி நீண்டிருக்கும் ஃபோர்க்குகளுடன் தன்னை சாப்பர் ரக கஸ்டமைஸ் பைக் மொடலாக வடிவம் பெற்றிருக்கிறது.

மொத்தம் 400 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 1,000சிசி எஞ்சினுடன் 6 ஸ்பீட் கியர்பொக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது சங்கிலி பிணைப்பு இல்லாமல், சாஃப்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது கார் எஞ்சின் என்பது உப தகவல். மேலும், இந்த கஸ்டமைஸ் பைக் மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாகவும் ரித்தேஷ் தெரிவிக்கின்றார். உலோகத் துறையில் ரித்தேஷ் இருப்பதால், இந்த பைக்கின் பல உலோக உதிரிபாகங்களை சொந்தமாகவே தயாரித்து பொருத்தி இருப்பதுதான் முக்கிய விடயம்.

கடந்த 8 ஆண்டுகால உழைப்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கை உருவாக்க 8 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக ரித்தேஷ் தெரிவித்தார்.