அதிகாரத்தைக் கைப்பற்ற வெடித்த யுத்தம்!!

742

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால் அவர் காயமடைந்தார்.

ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.இன்று வியாழக்கிழமை அ.தி.மு.க பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அ.தி.மு.கவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அது பெரும் கலவரமாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த லிங்கேஸ்வரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வழக்குரைஞர் மீது அ.தி.மு.க தொண்டர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இது இவ்விதமிருக்க மறைந்த முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவை வழிநடத்தப் போவது யார்? அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலர் யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு இன்று சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.கவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்குரைஞர் ஒருவர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட ‘சின்னம்மா’ என்று கூறப்பட்டு வரும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அ.தி.மு.கவினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரை பொலிஸார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதனால் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த வந்த நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அ.தி.மு.கவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை. மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வரவைக்க கூடாது. சுயஇலாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அ.தி.மு.க தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரையும் அ.தி.மு.க தொண்டர்கள் தாக்கினார்கள். இது சரியானதுதான் என்றும் சதிகாரியான சசிகலா புஷ்பாவின் உறவினர்களை இதைவிட மென்மையாக தாக்க முடியாது என்றும் ஆவடி குமார் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இது இவ்விதமிருக்க, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல்.

அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது.

பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது.சட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வேறொரு முதலமைச்சர் வேண்டும் என்ற குரல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மத்தியிலிருந்து எழுந்தால், அதனை ஒரு கட்சிக்காரனின் கருத்து, தொண்டனின் உணர்வு என்று இயல்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களே அந்தக் கருத்தைப் பகிரங்கமாகவும் ஊடகங்களிலும் சொல்லும் போது, அது கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்றாகப் பரிணாமம் பெறுகிறது.

இன்று முதலமைச்சராகியிருப்பவர், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில், அவரது விருப்பத்தின் பேரிலேயே முதல்வருக்கான பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.

ஆக, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமை வேண்டுமா, அல்லது இருவேறு தலைமைகள் வேண்டுமா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான விடை தேடி வேறெங்கும் செல்லத் தேவையில்லை.

அதிமுகவின் கடந்த கால வரலாற்றிலேயே சில வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.அ.தி.மு.கவை நிறுவிய எம்.ஜி.ஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார்.

ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியைத் தனது நம்பிக்கைக்குரிய ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார்.

பிறகு, மூத்த அமைச்சரும் எம்.ஜி.ஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார்.

எம்.ஜி.ஆர் மறைவதற்கு முன்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார். ஆக, எம்.ஜி.ஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சித் தலைமையைத் தன்வசமே வைத்திருந்தார்.

எந்தக் காலத்திலும், யார் வசமும் அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக முதல்வர் பதவியை இழக்க வேண்டிய இரண்டு தருணங்களிலும் கூட ஆட்சித் தலைமையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தாரே தவிர, கட்சித் தலைமையை எப்போதும் போல் தன்வசமே வைத்திருந்தார்.

மேற்கண்ட இரண்டு நடைமுறைகளும் வெவ்வேறாக இருந்தாலும், அணுகுமுறையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எம்.ஜி.ஆர் தன் காலத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்திருந்தாலும், அவர்கள் எம்.ஜி.ஆரை மீறிச் செயல்படக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.

எம்ஜிஆர் ஒன்று, நாங்களெல்லாம் பூஜ்ஜியம். எம்ஜிஆர் இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பில்லை என்று பெருமிதப்பட்ட வர்கள்.கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்குக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூடிப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதியைக் கவனமாகச் சேர்த்திருந்தார் எம்.ஜி.ஆர்.

அதேபோல, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தாலும், அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக ஒருமுறை அல்ல, இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து எவ்விதமான தயக்கமும் இல்லாமல் விலகியவர் ஓ.பன்னீர்செல்வம்.

தற்போது ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றப் போகிறது என்பது முக்கியமான கேள்வி. எம்.ஜி.ஆர் பாதையா, ஜெயலலிதா பாதையா? எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அ.தி.மு.கவுக்கு இருக்கும் சவால்களுள் முக்கியமானது.

ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்கள் சக்தி பெற்ற மாபெரும் ஆளுமைகள். ஆனால், இன்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருக்குமே அத்தகைய பலம் எதுவும் இப்போது வரை இல்லை என்பதுதான் களயதார்த்தம்.

ஒருவேளை, கட்சியும் ஆட்சியும் தனித்தனி நபர்களிடம் இருக்கட்டும் என்று முடிவு செய்து, அதிகாரக் குவிப்பைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வை அமுல்படுத்தும் பட்சத்தில், அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஏனென்றால், அதிகாரப் பகிர்வு என்பது எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அதிகார மையங்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஓ.பி.எஸ் பிரிவு, சசிகலா பிரிவு என்றெல்லாம் பிரிந்து நிற்கும் பட்சத்தில், அது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் ஆபத்து.

ஆக, இதுவரை இல்லாத வகையில் அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அது எவ்வளவு பெரியது என்பது இன்று கூடும் அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் முடிவில் இருக்கிறது.