கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேப்பர் போடச் சென்றபோது வீதியின் குறுக்கே போடப்பட்டிருந்த கயிறு கழுத்தை இறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக பலியானார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
சென்னை கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியை சேர்ந்தவர் துரைபாபு (65). இவர் ஓய்வுப்பெற்ற தபால் ஊழியர். இவர் பத்திரிகை முகவர். இவரது மகன் கெளரிசங்கர் (32). இவர் தந்தைக்கு உதவியாக இருந்தார். கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 6.40 மணிக்கு கெளரிசங்கர் பைக்கில் பத்திரிகை போடச் சென்றார்.
அங்குள்ள அலுவலகம் மற்றும் பல்வேறு துறை பகுதிகளுக்கும் சென்று பேப்பர் போட்டார். பின்னர் அவர் ஐசியு வார்ட் பகுதியில் பேப்பர் போட்டுவிட்டு திரும்பினார். அப்போது வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிறு பைக்கில் சென்ற கெளரிசங்கரின் கழுத்தை சுற்றி இறுக்கியது.
கழுத்து அறுப்பட்டு ரத்தவெள்ளத்தில் விழுந்த கெளரிசங்கர், அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் படூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் போட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கமராவை ஆய்வு செய்து பார்த்தனர். ஐசியு வளாகத்துக்குள் கெளரிசங்கர் செல்லும்போது குறுக்கே கயிறு இல்லாமல் இருப்பதும், அவர் வெளியே வரும்போது கயிறு இருப்பதும் அந்த கயிறில் கெளரிசங்கர் சிக்கி இறப்பதும் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கெளரிசங்கரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






