நடிகர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பெண்!!

722

திரைத்துறைப் பிரபலங்களிடம் குறைந்த விலையில் விமான டிக்கெட் எடுத்து தருவதாக கூறி லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்ணை சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்த ஸ்வேதா என்பவரை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சுமார் 26 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்ததாக, எஸ்.வி.சேகர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி விமான டிக்கெட்டுகள் கொடுத்து, ஸ்வேதா ஏமாற்றியதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவை பெயரில், போலி டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாகவும், ஆனால் அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டினார். எஸ்.வி.சேகர் மட்டுமல்லாது, பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்ளிட்ட பலரிடமும் ஸ்வேதா கைவரிசையை காட்டியுள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.