இலங்கையில் சீரற்ற காலநிலை..பலியானோர் தொகை 24 ஆக உயர்வு.. 22 மீனவரை காணவில்லை.. 30 படகுகள் கரை திரும்பவில்லை..

977

m2

சீரற்ற காலநிலையில் சிக்கி பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 8 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 4 பேரும் காலி மாவட்டத்தில் 12 பேரும் மரணமடைந்துள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் 22 மீனவர்கள் காணமல் போயுள்ளதாகவும் 30 படகுகள் கரைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.அதேவேளை சேதமடைந்த 14 படகுகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான மீனவப்படகுகளில் இருந்து காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களில் காலநிலை சீரடைந்தமை காரணமாக நீர்மட்டம் உயர்ந்திருந்த நீர்த்தேக்கங்களின் மட்டங்கள் குறைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாக மத்திய நிலையத்தின் பிரதி ஊடக பணிப்பாளர் சரத்லால் குமார தெரிவித்தார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டில் நிலவும் கடும் காற்றுடனான மழை காலநிலை படிப்படியாக குறையக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தென்மேற்கு கடற்பிராந்தியம் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும் என்று திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.