பேஸ்புக் நண்பிகளிடம் அந்தரங்க தகவல்களை பகிர்ந்த மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹடப்சர் மாஞ்சரிபார்ம் வீதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வந்தவர் ராகேஷ்(வயது35). இவரது மனைவி சோனாலி(31). இந்த தம்பதியின் சொந்த ஊர் நாசிக் மாவட்டம் ஆகும். திருமணத்திற்கு பின்னர் இருவரும் புனேயில் வசித்து வந்தனர்.
ராகேஷ் புனேயிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றி வந்தார். திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆனபோதும் ராகேஷ், சோனாலி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. எனவே அவர்கள் இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் சோனாலியின் தாய் கடந்த புதன்கிழமை மகளின் செல் போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் சோனாலி அழைப்பை எடுத்து பேசவில்லை. மருமகன் ராகேஸும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மகனை புனேயிலுள்ள சோனாலியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தநிலையில் அவர் புனே சென்று பார்த்தபோது, சோனாலியின் வீடு உட் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரமாக தட்டிப்பார்த்தும் கதவு திறக் கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சோனாலியின் சகோதரன் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் படுக்கை அறையில் சோனாலி சடலமாக கிடந்தார். மேலும் ராகேஷ் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பொலிஸார் ராகேஸின் சட்டை பையிலிருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது, “எனது மனைவி எப்போது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் தோழிகளிடம் பேசிக் கொண்டு இருப்பார்.
இந்தநிலையில் அவர் எங்களுக்கு குழந்தை பிறக்காததை பற்றியும், எங்கள் அந்தரங்கங்களை பற்றியும் பேஸ்புக் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
எனவே ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்.” என அந்த கடிதத்தில் எழுதியுள் ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






