இரண்டாவது குழந்தை பெற்றுகொண்டால் ஊக்குவிப்புத் தொகை : சீன அரசு ஆலோசனை!!

250

சீனாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அரசு, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறது.

சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான ஆணைக்குழுவின் பிரதியமைச்சர் வேங் பியான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, இதே சீனாவில்தான் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலில் இருந்து வந்தது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு பெண் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவர் கட்டாய கருக்கலைப்புச் செய்துகொள்ளவேண்டும் என்ற சட்டமும் இருந்து வந்தது.

இந்த நிலையில், சீனாவில் மத்திய வயதை உடையவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகக் குறைந்துபோன நிலையில், தேசிய உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் இரத்துச் செய்யப்பட்டு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், பொருளாதாரச் சிக்கல்களால் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள மக்கள் தயங்கிவருவதையடுத்தே ஊக்குவிப்புத் தொகை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.