சந்திரனுக்கு 2 பேரை சுற்றுலாப்பயணம் அனுப்பி வைக்கும் SpaceX நிறுவனம்!!

250

அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்காவின் SpaceX என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாப்பயணம் அனுப்பி வைக்கிறது. இந்த தகவலை SpaceX நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்திற்கு பெரும் தொகை பணத்தை SpaceX நிறுவனத்திடம் முற்கொடுப்பனவு செய்துள்ளனர்.

இதுபற்றி எலோன் முஸ்க் கூறும்போது, “அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால்தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது என்றும் இதற்கு முன்பு யாரும் சென்றிராத வகையில் இந்த 2 பேரும், அதிவேகமாக சூரிய மண்டலத்திற்குள் செல்வார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய 2 பேரின் பெயர் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இருப்பினும், “அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஹொலிவூட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.