ட்ரம்பிற்காக பிரத்தியேகமாக தயாராகியுள்ள கார் : குண்டுகளோ, விஷ வாயுவோ பாதிக்காது!!

415

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்துவதற்காக பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட லிமோசின் ரக கார் தயாராகியுள்ளது. இந்த கார் இம்மாத இறுதியில் வௌ்ளை மாளிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் என அழைக்கப்படும் இந்தக் காரில் எதிரிகளின் குண்டுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, விபத்தில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள் என பல பிரமிக்க வைக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

காரின் மொத்த எடை 8 டன்னாகும். 8 அங்குல தடிமன் கொண்ட ஸ்டீல் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை போயிங் 757 விமான எடைக்கு சமமாகும்.

துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டவை.

இதுமட்டுமல்லாது, இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு ஆக்சிஜன் வழங்கும் வசதியும் இந்த காரில் உள்ளது.

ட்ரம்ப் பயன்படுத்தவுள்ள இந்த காரின் விலை 1.2 மில்லியன் பவுண்ட்களாகும். ராக்கெட் தாக்குதலால் கூட இந்த காரை ஒன்றும் செய்ய முடியாது என்பது பிரமிக்க வைப்பதாக உள்ளது.

மேலும் உள்ள வசதிகளாவன…

* அதிபர் மற்றும் 4 பேர் வரை இந்த காரில் பயணம் செய்யலாம். இடையே கண்ணாடி தடுப்புகள் இருக்கும். இதன் அவசரகால பொத்தான்கள் அனைத்தும் அதிபர் இருக்கை அருகே இருக்கும். அவரவர் அருகே ஓக்சிஜன் பெறுவதற்கான பொத்தான்கள் உள்ளன.

* கதவுகள் மூடப்பட்டவுடன் இரசாயனத் தாக்குதலால் கூட பாதிக்கப்படாத வகையில் 100 சதவீதம் பாதுகாப்பானதாகும்.

* ஆபத்துக்காலத்தில் மிக வேகமாகவும், 180 டிகிரி சுழன்று தப்பிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரை பயிற்சி பெற்ற இரகசிய பாதுகாப்புப்படை ஓட்டுனர் இயக்குவார்.

* ஐந்து அடுக்குகள் கொண்ட கண்ணாடி மற்றும் பாலிகார்பனேட்டால் ஆன புல்லட் ப்ரூஃப் ஜன்னல்கள், ஓட்டுனர் அருகில் உள்ள ஜன்னல் மட்டும் 3 அங்குலம் கீழே இறங்கும்.

* ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறையில் மட்டும் தகவல் தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

* தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்

* அதிபரின் இருக்கையில், துணை அதிபர் மற்றும் பென்டகனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சட்டலைட் போன் வசதி உள்ளது.

* டீசல் தாங்கி வெடித்து சிதறாமல் இருக்கும் வகையில், தனித்துவமான நுரை உடைய தீயணைப்புக் கருவி பொருத்தப்படும்.

* இராணுவ தரம் கொண்ட சுமார் 5 இன்ச் தடிமன், இரட்டை கடினத்தன்மை கொண்ட ஸ்டீல், அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் ஆனது.

* துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், ஆபத்து காலத்தில் தேவைப்பட்டால் உடனடியாக பயன்படுத்தும் வகையில் இரத்தம் அடங்கிய பைகள்.

* வெடிகுண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவூட்டப்பட்ட ஸ்டீல் பிளேட் பாதுகாப்பு

* தோட்டாக்கள் துளைத்தால் பஞ்சராகாத டயர். டயர் சிதறடிக்கப்பட்டாலும், உலோக ரிம்டுடன் இயங்கும் சக்கரம்.

* கண்ணீர்புகை குண்டு வீசும் கருவி

* இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இயங்கும் கேமரா.