25 வருடங்களுக்குப் பிறகு சுயமாக எழும்பி அமர்ந்த பெண்!!

250

 
உடலில் இருந்து சுமார் 120 கிலோ எடை குறைக்கப்பட்டதால், 25 வருடங்களுக்குப் பிறகு படுக்கையிலிருந்து சுயமாக எழும்பி அமர்ந்துள்ளார் உலகின் மிகவும் பருமனான பெண்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமது, 2013 ஆம் ஆண்டு தனது 23 வயதில் 300 கிலோ எடையை பெற்றிருந்தார். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அவரது 26 வயதில் 500 கிலோ எடையை அடைந்தார். இந்நிகழ்வின் ஊடாக உலகிலேயே அதிக எடை கொண்ட பெண் என வர்ணிக்கப்பட்டார் இமான்.

அவரது எடையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்ட பயணத்திட்டம் மூலம், இந்தியாவின் மும்பை நகரிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் சுமார் 120 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகிச்சையின் மூலம், சுமார் 25 வருடங்களாக அமர முடியாமல் அவதிப்பட்டு வந்த இமான், தற்போது சுயமாக எழும்பி உட்காரும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானிற்கு பிசியோ தெரபி சிகிச்சையும், லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரின் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுமார் 13 பேர் கொண்ட வைத்தியர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதோடு இன்னும் ஆறுமாத காலப்பகுதியில், அவரின் எடை சுமார் 200 கிலோகிராமல் குறையும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.