இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார் : ஆனால் மக்களுக்குப் பயனில்லை!!

255

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது.

இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரியொருவர், இன்னும் இரண்டு வாரங்களில் விமான நிலையத்தை முழுமையாகத் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், எனினும், இதனால் பயணிகளுக்கு எந்தவித நன்மையும் உடனடியாகக் கிடைத்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத் திருத்தப் பணிகள் நிறைவுற்றாலும் சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச விமானச் சேவைகள் தற்போது நடைமுறையில் இருப்பது போலவே மாலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இந்தியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உடனடியாகச் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பாலான சீனர்கள் மத்தள விமான நிலையத்தையே பயன்படுத்துவதாகவும், இதனால் பண்டாரநாயக்க விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரையில் மத்தள விமான நிலையப் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டாமென்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.