குவைத்தில் தொடர் சித்திரவதையால் உணவின்றி உயிரிழந்த இலங்கை பணிப்பெண்!!

275

குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற 22 வயது யுவதி ஒருவர் உணவின்றி உயிரிழந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு திடீர் மரண பரிசோதகர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இந்த மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியர் கீர்தி சிறிஜயந்த விக்ரமரத்ன பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த யுவதி பணி செய்த வீட்டின் உரிமையாளரினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை பொறுத்த முடியாமல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்தப் பகுதியில் பாழடைந்த வீட்டில் இரண்டு வாரங்கள் உணவின்றி வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஸ்கெலியாவை சேர்ந்த 22 வயதான திருமணமாகாத கருப்பையா தர்ஷினி என்ற யுவதியே மோசமான மரணத்திற்கு முகங்கொடுத்துள்ளார். தர்ஷினி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைத் நாட்டுக்க பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.

அவர் அங்கு பணிக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இருந்தே பல சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் தன்னை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு தூதரகத்தில் தொடர்ந்து அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் மறைந்திருந்த இரண்டு வாரங்கள் அவருக்கு உணவு நீர் ஒன்று கிடைக்காமையினால் பசியில் உயிரிழந்துள்ளார். வைத்தியரினால் மேற்கொண்ட பிரேத விசாரணைகள் மூலம் இந்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.