வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு வருமானத்தில் 500 மில்லியன் ரூபா நட்டம்!!

225

வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதற்கு நேரிட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே இந்த நிலைமையை சீர் செய்வதற்கான ஒரே வழி என சிரேஷ்ட விரிவுரையாளர் கூறியுள்ளார்.

பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் நாளாந்தம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 450000 இற்கும் அதிகமானவை தனியார் வாகனங்கள் எனறும் பொலிஸ் அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவை அல்லது தனியார் வாகனங்கள் மூலம் நாளொன்றிற்கு 19 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொழும்பிற்குள் பிரவேசிக்கின்றனர்.

இதன் காரணமாக மருதானை, பொரள்ளை சந்தி, கனத்தை சுற்றுவட்டம், நாராஹேன்பிட்டி பகுதிகளில் தொடர்ந்தும் வாகன நெரிசல் ஏற்படுவதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

வீதிகளை விஸ்தரிப்பதன் ஊடாக மாத்திரம் வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்கான தீர்வைக் காணமுடியாதென அமைச்சின் செயலாளர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து சேவையில் ரயில் மற்றும் பஸ் சேவைகளை விரிவுபடுத்துவதன் ஊடாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்பொருட்டு 1.5 பில்லியன் ரூபா ஜப்பான் நிதியுதவியுடன் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.