விமானத்தில் புகுந்த குட்டி பாம்பால் பதறிய பயணிகள்!!

414

flight

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் புகுந்த குட்டி பாம்பினால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று இரவு புறப்படுவதாக இருந்தது. சிங்கப்பூருக்கு சென்று திரும்பியிருந்த அந்த போயிங் 747-400 பகல் முழுவதும் சிட்னி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அடுத்த பயணத்திற்கான நேரம் நெருங்கியதும் விமானத்தின் ஊழியக் குழுவினர் விமானத்தை அடைந்தபோது சிறிய பாம்பு ஒன்றினை விமானத்தின் நுழைவு கதவு அருகே கண்டனர். 20 செ.மீ நீளமுள்ள இந்த பாம்பினால் நேற்று குறிப்பிட்டிருந்த பயணமே தள்ளிப் போடப்பட்டது.

விமானத்தில் இருந்த பாம்பினைப் பிடித்து அது எங்கிருந்து வந்தது என்பதனை அறிவதற்காக தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக விமான நிறுவனத்தின் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதனுடைய இருப்பிடம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும், விவசாயத்துறையைச் சேர்ந்த அறிஞர்கள் இது ஆசியாவில் காணப்படும் விஷமற்ற பாம்பு வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த 370 பயணிகளும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இன்று காலை மாற்று விமானம் மூலம் சிட்னியிலிருந்து டோக்கியோவிற்கு புறப்பட்டனர். இது குவாண்டாஸ் விமானத்தில் நடைபெறும் இரண்டாவது பாம்பு சம்பவம் ஆகும்.

கடந்த ஜனவரி மாதம் பப்புவா நியுகினியாவிற்கு சென்ற விமானத்தின் இறக்கை பகுதியில் பயணித்த ஒன்பது அடி நீளமுள்ள மலைப் பாம்பு விமானம் கீழிறங்கியபோது செத்திருந்ததை பயணிகள் திகிலுடன் கவனித்தனர்.

கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சரக்கு விமானம் ஒன்றில் விமானிகள் அறையின் முன்புற பகுதியின் டேஷ்போர்டிலிருந்து வெளிவந்த ஒரு பாம்பைக் கண்டு பயந்த விமானி வடக்கு அவுஸ்திரேலியாவில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கம் செய்தார்.

அவுஸ்திரேலியப் பல்கலைக் கழத்தில் செயல்படும் பாம்பு விஷம் குறித்த ஆராய்ச்சி பிரிவின் கணக்குப்படி முதல் பத்து இனங்கள் உட்பட உலகில் கொடிய விஷமுள்ள 20லிருந்து 25 வகையான பாம்புகள் அவுஸ்திரேலியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.