வவுனியாவில் இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு விளக்கமறியல்!!

380

வவுனியா, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணியளவில் வவுனியா நகரில் இருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் இ.கார்த்திகேயன் (வயது 29) என்பவர் பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சகோதர இனத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், அவர் அணிந்திருந்த சங்கிலியும் காணாமல் போயிருந்தது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த நபரின் வாக்கு மூலத்தை பொலிசார் பதிவு செய்ய மறுத்ததுடன் சமரசம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, வவுனியசாலைக்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களும் இது தொடர்பில் முறைபாடு செய்ய வேண்டாம் என பாதிக்கப்பட்ட இளைஞனின் தரப்பிடம் கூறியிருந்தார்.

குறித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பொலிசாருடன் தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு நீண்ட நேரமாக வாக்குவாதப்பட்டதன் விளைவாக திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் சகோதர இனத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்றைய தினம் (21.03) வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.