நடிகர் ஜோன் ஆபிரகாம் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை இந்தி, ஆங்கில மொழிகளில் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள மெட்ராஸ் கபே ஹோட்டலில் ராஜீவ் காந்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது.
தமிழகத்தில் மெட்ராஸ் கபே படத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இதனால் மெட்ராஸ் கபே படம் தமிழ்நாட்டில் திரையிடப்படவில்லை.
இதேபோல் லண்டனிலும் தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக அங்கேயும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட யாரும் முன்வரவில்லை. ஆனால் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மெட்ராஸ் கபே படம் திரையிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் பகுதிகளில் அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி பணிகள் அகன்ற திரை கொண்ட எல்.சி.டி. டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டன. அதில் தற்போது மெட்ராஸ் கபே படமும் திரையிடப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான மெட்ராஸ் கபே படத்தை தயாரிக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷ மறைமுக ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.