பறவைகளால் தரையிறங்க முடியாது வானிலேயே வட்டமிட்ட விமானங்கள்

924

flight

இன்று சென்னை விமான நிலையத்தில்  பறவைகளால் விமானங்கள் தரையிறங்க முடியாது வானிலேயே பல நிமிடங்களுக்கு வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான பன்னாட்டு, உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அத்துடன் விமான நிலைய பகுதியில் ஏராளமான பறவைகள் பறக்கின்றன.

பறவைகள் கூட்டமாக பறக்கும்போது சில பறவைகள் விமானத்தின் மீது மோதுவதால் அதன் கண்ணாடி உடையவும் இயந்திரங்கள் சேதமடையவும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், விமானங்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னைக்கு வந்த ஒரு விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் சிக்கிக் கொண்டன.

இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிற்கும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் தரையிறங்க இயலவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து சென்று இயந்திரத்தில் சிக்கிய பறவைகளை அகற்றினார்கள்.

இதற்குள் சென்னை விமானத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் கீழே இறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமிட்டன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 50 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்தது. நிலைமை சரியானபிறகே சரியாக 4.20 மணிக்கு தரையிரங்கியது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதிலும் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து பறவைகளை வெடி போட்டு கலைத்தனர். அதன்பிறகு விமான போக்குவரத்து சேவை வழக்கம்போல் நடந்தது.