24 கரட் தங்கத்தினால் பாதணிகள் தயாரிக்கும் இத்தாலிய வடிவமைப்பாளர்!!

345

 
இத்தாலியைச் சேர்ந்த பாதணி வடிமைப்பாளர் ஒருவர், 24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரித்துள்ளார். அன்டோனியோ வியெட்ரி எனும் இவர், இத்தாலியின் வட பிராந்திய நகரான டூரினைச் சேர்ந்தவர்.

சுத்தமான 24 கரட் தங்கத்தினால் பாதணி தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார். சுவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலான வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இப் பாதணிகளை வாங்குவார்கள் என வியெட்ரி நம்புகிறார்.

இப் பாதணிகளில் தங்கம் வெறுமனே பூசப்படவில்லை. ஒரு பொத்தான் போன்று தங்கம் பொருத்தப்படவில்லை. மாறாக, பாதணியின் முக்கிய பகுதியாக தங்கம் உள்ளது அவர் கூறுகிறார். ஒவ்வொரு ஜோடி பாதணியும் 230 கிராம் தங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன.

24 கரட் தங்கத்தினால் பாதணிகளை தயாரிப்பது குறித்து 8 மாத கால ஆய்வு மற்றும் முயற்சிகளின் பின்னர் 2016 ஆம் ஆண்டு இப் பாதணிகளைத் தயாரிக்க ஆரம்பித்ததாக அன்டோனியோ வியெட்ரி தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் உறுதியையும் பாதணியின் நெகிழ்வுத் தன்மையையும் சமநிலைப்படுத்துவது கடினமானதாக இருந்தது. பாதணி மிக இறுக்கமாக இருந்தால், தங்கம் வளைந்துவிடும். அதேவேளை பாதணி மிக பாரமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்” என்கிறார் அவர்.

தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட, ஆண்களுக்கான பாதணி ஒரு ஜோடியின் விலை தலா 25,000 யூரோ (சுமார் 41 இலட்சம் ரூபா) எனவும் பெண்களுக்கான ஒரு ஜோடி பாதணியின் விலை 30,000 யூரோ (சுமார் 50 இலட்சம் ரூபா) வியெட்ரி தெரிவித்துள்ளார். பாதணிகளை ஹெலிகொப்டர் மூலம் விநியோகிப்பதற்கான செலவும் இவ் விலையில் அடங்குமாம்.