
வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி சென்ற இலங்கை பிரதிநிதிக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெறவுள்ள உலக அளவிலான வர்த்தக கண்காட்சிக்கான அழைப்பை விடுப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று காலை புதுச்சேரி சென்றுள்ளார்.
புதுச்சேரி வர்த்தக சபை பிரதிநிதிகளை ஹோட்டல் ஒன்றில் காலையில் சந்திக்கவும் மாலை தொழில் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவும் ஏற்பாடு நடந்தது.
ஆனால் வர்த்தக சபை நிர்வாகிகள் பலர் பின்வாங்கியதால் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இலங்கை வர்த்தகர் வந்திருக்கும் தகவல் கசிய துவங்கியதால் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் முன்பு திரண்டனர்.
நிலைமை சிக்கல் ஆனதை தொடர்ந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு, இலங்கை வர்த்தகர் தகவல் தெரிவித்தார். இதன் பின்னர் எந்த நிகழ்ச்சிலும் கலந்து கொள்ள வேண்டாம். உடனடியாக நாடு திரும்புமாறு இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பகல் 2.10 மணிக்கு இலங்கை வர்த்தக பிரதிநிதி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி கலந்து கொண்டுள்ளதாக தமிழர் அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணியளவில் ஹோட்டல் நுழைவாயில் முன்பு பெரியார் திராவிடர் கழகம் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை இயக்கம், இந்திய பூரான்கள் இயக்கம், தமிழர் களம், மனித உரிமைகள் அமைப்பு நிர்வாகிகள் திரண்டு வந்து கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள இலங்கை பிரதிநிதியை வெளியேற்றக் கோரினர்.
அப்போது ஹோட்டல் பெயர் பலகையை கல்வீசி தாக்கினர். அதையடுத்து பொலிசார் அவர்களிடளம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதிநிதி கலந்து கொள்ளவில்லையென தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.





