மட்டக்களப்பில் வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்களால் துன்புறுத்தப்படும் பெண்கள்!!

479

charls

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்கள் பெண்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் தனியாக வாழும் பெண்களின் வீதம் அதிகரித்துள்ள நிலையில் அது மாவட்டத்தின் வறுமை நிலையை உயர்த்துவதாக அமைந்து வருகின்றது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உதவித்திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் பெண்களினால் பல்வேறு பொருட்கள் உற்பத்திசெய்யப்பட்டுவருவதுடன் அவை மாவட்டத்துக்கு வரும் உல்லாசப்பயணிகளை பெரிதும் கவர்வதாகவும் உள்ளது.

இந்த நிலையில் கிராம மட்டத்தில் இவ்வாறான உற்பத்தி பொருட்களை அவற்றினை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையில் பலர் தமது உற்பத்தி நடவடிக்கைகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

உற்பத்திப்பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய இந்த உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவகம் ஆகியவை இணைந்து மாபெரும் “புதுவாழ்வு மட்டு.மகளிர் உற்பத்திச் சந்தை” ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு நகரின் லொயிஸ் அவனியுவில் இந்த சந்தை நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ரதி அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் குணரெட்னம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் ரஞ்சித மூர்த்தி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரிவு பணிப்பாளர் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா, வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பொருளாதார பங்களிப்பினை மேம்படுத்தி அவர்களது பங்கேற்பு, சிந்தனை,செயற்றிறன் மற்றும் உழைப்பு, முயற்சிகளை வெளிக்கொணர்வதனூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சமூக பிரச்சினைகளை ஒழித்தல், மட்டக்களப்பின் வளங்களை பயன்படுத்தி தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் பாரம்பரிய கைப்பணி பொருட்கள், தானியம், மா வகைகள், பனம் பொருள் உற்பத்திகள், பலகார தின்பண்ட வகைகள், பன் உற்பத்தி பொருட்கள், பிரம்பு மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் உள்ள உற்பத்தியாளர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தும் வகையில் எதிர் காலத்தில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ரதி அஜித்குமார் தெரிவித்தார்.