எமது போராட்டத்திற்கு மாகாண அரசே முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் : வேலையற்ற பட்டதாரிகள்!!

216

மத்திய அரசை விட மாகாண அரசு தான் எமது முதல் சேவையாளர்கள். எனவே மாகாண அரசு எமது இப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என காரைதீவில் சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றோடு அவர்களின் போராட்டம் தொடங்கி 58வது நாளை அடைந்துள்ளது. இந்நிலையில் பெரும் ஆதங்கத்தில் இருக்கும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது போராட்டம் இன்று 58வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் காலை முதல் எமது விவகாரம் பேசுபொருளாக இருந்திருக்கிறது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் முதலில் எமக்காக குரல் எழுப்பியிருந்தார். சுகாதார அமைச்சர் நசீரும் எமக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார். இன்னும் பலர் பேசியதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் கிழக்கு மாகாண சபை இதுவரை எம்மிடம் எவ்வித வாக்குறுதிகளையோ உத்தரவாதத்தினையோ தரவில்லை.

மக்களால் தெரிவு செயய்யப்பட்ட எமது மாகாண சபை படித்த எமக்கு வேலை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லையாயின் இன்னும் அது தேவையா? எனக் கேட்கத்தோன்றுகின்றது.

நாம் எமது பட்டத்திற்கான அரச தொழிலையே கேட்கின்றோம். அந்தந்த வருடங்களில் பட்டதாரிகள் வெளியேறுகின்றபோது தொழிலை வழங்கினால் இவ்வாறானதொரு பாரிய பிரச்சினை எழுந்திருக்காது.

தொழிலுக்குப் பொருத்தமான பாடநெறிகளை அரசாங்கமே முன்வைக்கவேண்டுமெ தவிர நாங்களல்ல. இனிமேலாவது எங்களுக்கான தொழில் கிடைக்கும்வரை எமது சாத்வீகப் போராட்டம் தொடரும் என்றனர்.