வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபரை மாற்றாதீர்கள் எனக் கோரி ஆர்ப்பாட்டம்!!

338

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய செ.தர்மரட்னத்தினை மாற்றாதீர்கள் எனக் கோரி பாடசாலை மாணவர்களால் இன்று(26.04.2017) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றுமு: பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்ததாகவும் இந் நிலையில் புதிய அதிபாக நித்தியானந்தம் நியமிக்கப்படுவதாகவும் அதனை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள் பாடசாலைககு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு நித்தியானந்தம் என்பவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

இதன் பிரகாரம் வடமாகாண கல்வி அமைசசின் செயலாளரினால் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நித்தியானந்தம் என்பவரை கடமைகளை பெறுப்பேற்குமாறு கோரியிருந்ததுடன் நிமியக்கடிதமும் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த பாடசாலையின் பௌதீக அபிவிருத்தி கல்வி வளர்ச்சி என்பவற்றுக்காக இதுவரை சிறப்பாக பணியாற்றியதாக மாணவர்களால் கருதப்பட்ட அதிபரான செ.தர்மரட்ணம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக மாணவர்கள் தமது பாடசாலைக்கு தர்மரட்னம் அதிபரே நியமிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்து இரண்டாம் தவணை ஆரம்பமான இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். இதற்காக பெற்றோர் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் ஆதரவையும் கோரியிருந்தனர்.

புதிய அதிபர் கடமைகளை பெறுப்பேற்க இன்று வருகை தந்த நிலையில் பாடசாலைக்கு முன்பாக மாணவர்கள் பெற்றோர் பழைய மாணவர்கள் குழுமியிருந்த நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரினால் மாணவர்களை பாடசாலைக்கு செல்ல பணிக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று மாணவர்கள் பாடசாலைக்குள் சென்ற நிலையில் பாடசாலை முன்வாயில் மூடப்பட்டதுடன் பொலிஸாரும் கடமையில் ஈடபட்டிருந்தனர்.

எனினும் சிறிது நேரத்தில் முன் வாயிலை திறந்து வெளியேறிய மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக எமது அதிபரை மாற்றாதே, மாணவர்களின் உரிமைக்கு மதிப்பளி, அருவித்தோட்ட பாடசாலையின் தகரப்பந்தல் எங்கே, கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் வீதியின் மறுபுறத்தில் பெற்றோர் மற்றும் பழைய மணாவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ; கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏதுவான நிலைமைகள் காணப்படாது என்பதனையும் அதற்காக உள்ள நடைமுறை சிக்கல்களையும் எடுத்தியம்பி கலந்துரையாடியிருந்தனர்.