அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

289

 
அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா நேரியகுளம் ஜாமிஉல் மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா மஸ்ஜித் திறப்புவிழவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில்..

பள்ளிவாசல் நிர்வாகங்கள் அரசியல்வாதிகளின் அட்டவணைக்கு செயற்படுவதை விடுத்து நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு அரசியல்வாதிகளை செயற்பட வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவுகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் நீதிமன்றம் சென்ற வரலாறுகளையும் எமது சமூகம் உருவாக்கி இருக்கின்றது என்பதில் வேதனையளிக்கிறது.

பள்ளிவாசல்களும் பொது அமைப்புக்களும் இணைந்தே ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவும், அபிவிருத்தியடையச்செய்யவும் முடியும், மாறாக ஒரு சிலரின் சுயநலத்துக்காக நிர்வாகங்ககள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவதானிக்கிறோம் எனவே அவ்வாறான செயற்பாடுகளை இங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகம் செய்யாது என நான் நம்புகின்றேன்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான அல்லாஹ்வின் கோபப்பார்வையே நாளுக்கு நாள் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள காரமாக அமைகின்றது. எனவே இந்த பள்ளிவாசலை இறைவன் விரும்பும் வகையில் பயன்படுத்தி அவனது நெருக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த நிகழ்விற்கு சிங்கள தமிழ் மத்தலைவர்களையும் அழைத்து அவர்களுக்கான உரிய கௌரவத்தை கொடுத்தது போல இனி வரும் காலங்களிலும் எமது அயல் கிராமங்களிலுள்ள சிங்கள தமிழ் மக்களுடன் சக வாழ்வை கட்டியெழுப்பும் வகையிலும் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் குறித்த பள்ளிவாசல் அமைவுக்கு உதவிய அனைத்து தனவந்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

கலாநி பி.பி.அப்துல் ஹமீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயர் அதிகாரிகள் பிரதேச ஜமாத்தார்கள் மற்றும் சகோதர இன மதத்தலைவர்கள், மக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.