இங்கிலாந்தில் அபூர்வமாக ஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்!!

566

uk

இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை எனவும் 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கில்பெர்ட்டை முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.

எனவே இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்து விடுவது நல்லது என அறிவுரையும் வழங்கினார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத கில்பெர்ட்டும் அவரது கணவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்தனர்.

அதன்படி மருத்துவர்களின் ஒத்துழைப்போடு கடந்த மார்ச் மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ரோயல் ஜிவென்ட் மருத்துவமனையில் கில்பெர்ட்டுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

தலா 1.75 கிலோ எடை இருந்த அக்குழந்தைகளுக்கு பியான், மட்டிசன், பாய்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது. 6 வாரங்கள் மருத்துவமனை பராமரிப்பில் இருந்த தாயும் குழந்தைகளும் சமீபத்தில் வீடு திரும்பினர்.