வெளிநாட்டு இராஜதந்திரிகள், மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் பதவிப் பிரமாணம்!!

444

nothern

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடியில் கோலாகலமான நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதி அல்லது வடக்கு ஆளுனர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அல்லது ஆளுனரின் முன்னிலையில் கட்டாயம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் வட மாகாணசபை நடவடிக்கைகளை சர்வதேச மயப்படுத்த முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பெருமளவிலான வடக்கு மக்களை பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கச் செய்ய கூட்டமைப்பு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாணசபை முதலமைச்சர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் இதுவரையில் வெளிநாட்டு தூதுவர்கள் பங்கேற்றதில்லை.

இதேவேளை பதவிப் பிரமாண நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இலங்கை எதிர்ப்பு தரப்பினர் பங்கேற்கின்றார்களா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.