வெள்ளம் மற்றும் மண்சரிவில் 194 சடலங்கள் இதுவரை மீட்பு, 99 பேரைக் காணவில்லை!!

366

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் கடந்த வாரம் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் 376 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 63 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மோசமான இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவால் 6 இலட்சத்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் அடைமழை பெய்தபோதிலும் அதன்பின்னர் சற்று குறைவடைந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளது. இதனால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வீதிகளில் தேங்கிய வெள்ளநீரும் வழிந்தோடாமல் இருக்கின்றது.

வெள்ள ஆபத்துள்ள பகுதிகளிலும், பலமிழந்து போயுள்ள அணைக்கட்டுகளை மண்மூடைகளைக் கொண்டு பலப்படுத்துவதிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, 15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவினாலும் இரத்தினபுரி, களுத்துறை, காலி, அம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களிலுள்ள பிரதான பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குளங்களில் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் படையினரின் உதவியுடன் அரசு மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. தொண்டர் படைகளும், அரசியல் கட்சிகளின் நிவாரணப் பிரிவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அதேவேளை, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விழிப்பாக இருக்குமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.