பெங்களூரில் 11வது மாடியில் மூன்றரை அடி இடைவெளி உள்ள பல்கனிகளைத் தாண்ட முற்பட்டுப் பரிதாபமாக பலியாகியுள்ளார் இளம்பெண் கவிதா. இவரின் பெற்றோர், தங்கள் மகள் பயமறியாதவள் எனவே, இது விபத்து தான். நண்பர்கள் மீது சந்தேகமில்லை என பொலிசில் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் ராஜாஜிநகரில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் கவிதா (31). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றினார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெங்களூர் வந்த கவிதா அமெரிக்கா திரும்பிச் செல்ல மனமின்றி இங்கேயே தங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 1ம் திகதி இரவு பெற்றோர் கேரளாவுக்கு சென்று இருந்த காரணத்தால் தனது நண்பர்களுடன் கொடிகேஹள்ளியில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் கவிதா.
அதிகாலை 2 மணி வரை நடந்த விருந்தில் கவிதாவும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கவிதா கொடிகேஹள்ளி கனரா வங்கி லேஅவுட் ராஜீவ்காந்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரான கல்யாண் வர்மா என்பவரது வீட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் கல்யாண் வர்மா வசித்து வருகிரார். அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அடுத்த மாடிக்குத் தாண்டப்போவதாக தெரிவித்துள்ளார் கவிதா.
ஆனால் அதனை பொருட்படுத்தாத நண்பர்கள் உள்ளே உறங்கச் சென்று விட்டதாகத் தெரிகிறது. ஆனால், சுமார் மூன்றரை அடி இடைவெளியில் இருந்த மற்றொரு பால்கனிக்குச் செல்வதைச் சவாலாக எடுத்துக் கொண்ட கவிதா, எதிர்பாராத விதமாக கால் தவறி 11வது மாடியில் இருந்து தரை தளத்தில் விழுந்துள்ளார்.
இதில் அவரது தலை, கை, காலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடிகேஹள்ளி கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.
நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவிதா மது அருந்தியதும் பல்கனிக்குத் தாவ முற்பட்டு பலியானதும் தெரியவந்தது. மேலும், இதுபற்றி கவிதாவின் பெற்றோர் பொலிசாரிடம் கூறுகையில் எனது மகள் மிகவும் மன தைரியம் படைத்தவள்.
கவிதா பயந்து நாங்கள் பார்த்தது இல்லை. கவிதாவின் நண்பர்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மாடியில் இருந்து அவளே தாண்டி இருப்பதை நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கவிதாவின் மரணத்தை விபத்து என பதிவு செய்த பொலிசார் இதில் அவரது நண்பர்களுக்கு சம்பந்தமில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.