தோழர் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் : கலைஞர்!!

423

karunanithi

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன.

ஆனாலும் இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்த பாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தோழர் தியாகு உண்ணா நிலையை மேற்கொண்டு வருகிறார்.



தி.மு.கழகத்தின் சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றையதினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்துஉண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

தோழர் தியாகு அவர்களின் கோரிக்கை நியாயமானது என்ற போதிலும் ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தி.மு. கழக ஆட்சியில் என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர் இப்போதும் காப்பாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும் கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, கொமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும் காலவரையற்ற உண்ணா நிலையினை அவர் உடனடியாகக் கைவிட்டு ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடரவேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.