பொதுமக்களை படுகொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை : 20 வருடங்களின் பின் அதிரடி தீர்ப்பு!!

336

அம்பாறை மாவட்டத்தின் சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்களைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மட்ட மேல்நீதிமன்றம் நேற்று இத்தண்டனையை விதித்துள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பொலிசாருக்கு எதிராக மனிதப் படுகொலை உள்ளிட்ட 43 கடும் குற்றப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும் தமிழ் பேசும் நீதிமன்றமொன்றில் வழக்கு நடைபெறுவதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையைத் தொடர்ந்து வழக்கு அம்பாறையில் உள்ள மாகாண மட்ட மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருபொலிஸ் உத்தியோகத்தர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்திருந்தார்.

எஞ்சிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பொதுமக்களின் படுகொலை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டுமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.