
தந்தையின் ஐபேட் மூலம் இன்டர்நெட்டில் துழாவி 6 வயது இரட்டை குழந்தைகள் 1600 டொலருக்கு பொருட்களை வாங்கி தந்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்தவர் அஷ்லே கிரிபித். இவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கடந்த வார இறுதியில் கிரிபித்துக்கு அப்பிள் இணையதள நிறுவனத்தில் இருந்து தபால் ஒன்று வந்திருந்தது.
அப்பிள் நிறுவனத்தில் இருந்து தனக்கு என்ன வந்துள்ளது என்று ஆச்சரியமாக அதை பிரித்து பார்த்தபோது, கிரிபித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில்4 பக்க அளவுக்கு பில்கள் இருந்தன. அதில் 1600 டொலர் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தவறாக பில் அனுப்பி விட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது. சரி என்ன வாங்கப்பட்டுள்ளது என்று பார்த்தபோது கணனியில் தோன்றி நாம் சொல்லும் உத்தரவுக்கு எல்லாம் கீழ்படியும் விர்ச்சுவல் பெட்ஸ் எனப்படும் வீடியோகாட்சி பிராணிகள், துணிகள் ஆகியவை வாங்கப்பட்டிருந்தன. தன்னுடைய குழந்தைகள்தான் சுட்டியாச்சே அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.
அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம். அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். அதை வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் அவர்கள் இவ்வளவையும் வாங்கியுள்ளனர். குழந்தைகளை அடிக்கவா முடியும் அதனால் இணையதள நிறுவனத்திடம் நடந்ததை விளக்கி இமெயில் அனுப்பினார்.
அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து அப்பிள் நிறுவனம் பில்தொகையை நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்துதான் கிரிபித் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். உடனடியாக அவர் செய்தது ஐபேடில் இருந்த பாஸ்வேர்டையும் கிரெடிட் காட் எண்ணையும் மாற்றியதுதான்.





