16 வயதினிலே படத்தில் கமலுக்கு சம்பளம் 27 000, ரஜினிக்கு 2500- பாரதிராஜா, பாக்யராஜ் மலரும் நினைவுகள்!!

530

16

ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய 16 வயதினிலே படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் ரிலீசாக உள்ளது.

இப்படத்தை இயக்கிய பாரதிராஜாவும் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜும் படம் சம்பந்தமான மலரும் நினைவுகளை வெளியிட்டனர். பாக்யராஜ் கூறியதாவது..

16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கல அதுக்கு பதிலா என்னை வளத்தா என்றொரு வசனம் வரும். அதை கமல் உணர்ச்சிகரமாக பேசி முடித்தார். அதை பார்த்த சுற்றி நின்ற படக்குழுவினர் கண்ணீர் விட்டனர்.

இன்னொரு காட்சியில் ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி காறி துப்ப வேண்டும். சோப்பு நுரை, டூத் பேஸ்ட் என்று எதையெல்லாமோ வைத்து ரஜினி முகத்தில் அடித்தோம். அது சரியாக வரவில்லை. பாரதிராஜா தவித்தார் நேரம் போய்க் கொண்டு இருந்தது.

உடனே ரஜினி எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க பேசாம ஸ்ரீதேவியை என் முகத்தில் நிஜமாகவே காறி துப்ப சொல்லுங்க என்றார். அப்படி ஸ்ரீதேவி நிஜமாகவே காறி துப்பியதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் என்றார்.

பாரதிராஜா கூறியதாவது..

16 வயதினிலே படத்தில் அதிக சம்பளம் வாங்கிய கமல்தான். அவருக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது. ஒரு பட பூஜைக்கு பைக்கில் ஸ்டைலா வந்து இறங்கிய ரஜினியை பார்த்தேன். பிடித்து போனது. பரட்டை கேரக்டரில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து அணுகினேன்.

இது ஆர்ட் பிலிம் என்று சொல்லி நடிக்க அழைத்தேன். அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா 5000 ரூபாய். நான் 3000 ரூபாய் தருவதாக சொன்னேன். சம்மதிச்சு நடித்தார். நான் அவருக்கு கொடுத்தது 2500 ரூபாய்தான். 500 ரூபாய் சம்பள பாக்கியை இன்றுவரை கொடுக்கவில்லை. கோவணம் கட்டும் காட்சியில் கமல் தயங்காமல் துணிச்சலாக நடித்தார் என்றார்.