புதிய விசாரணைக் குழு நியமனம் : ஒரு மாதம் கால அவகாசம் : முதலமைச்சர் அறிவிப்பு!!

226

வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரனே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் புதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையை ஒரு மாத காலத்தினுள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

அதில் இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதுடன், இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.

தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த அமைச்சுக்களை தற்காலிகமாக பொறுப்பேற்றார்.

இதேவேளை, சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீது முறைப்பாடு கொடுத்தவர்கள் விசாரணைக்கு வருகை தரவில்லை என்பதால் மீளவும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.