ராஜினாமாவை திரும்பப் பெற்றார் அத்வானி

363

பாரதிய ஜனதா கட்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கட்சியின் தேர்தல் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து தான் வகித்த அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறியிருந்த கட்சியின் நிறுனர்களில் ஒருவரான எல் கே அத்வானி, 24 மணி நேரத்துக்குள் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார்.

கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோரிக்கையின்படி அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக எல் கே அத்வானியின் வீட்டில் அவரின்றி நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

“அத்வானி அவர்கள் கட்சி தொடர்பாக எழுப்பிய கரிசனைகள் கவனிக்கப்படும் என்று நான் கட்சியின் சார்பாக தெரிவித்தேன். இது குறித்து அவரோடு இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினேன். இன்று மதியம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேசிய நலனை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து கட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக் கொண்டார். மோகன் பகவத்தின் ஆலோசனையை ஏற்க அத்வானி முடிவு செய்துள்ளார்” என்றார் ராஜ்நாத் சிங்.

கட்சியின் தலைவர்கள் தமது சுய விருப்புக்களின் அடிப்படையில் செயல்படுவதாகவும் கட்சி போகும் பாதை தனக்கு ஏற்புடையாதாக இல்லை என்றும் எல் கே அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் குஜராத் முதல்வருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் விரும்பாத்தாலேயே பதவி விலக முன்வந்ததாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவத்தவர்களில் ஒருவரான அத்வானி, அக் கட்சி தலைமையிலான கட்சி, நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதன் செல்வாக்கு உயர முக்கிய காரண கர்த்தா ஆவார்.

தற்போது 85 வயதான அத்வானி பிரதமராக வேண்டும் என்ற ஆசையோடிருப்பதாக கூறப்படுகிறது. மோடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பதவி உயர்வு அடுத்த தேர்தலில் அத்வானி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படக் கூடிய வாய்ப்பை பெருமளவு மட்டுப்படுத்திவிட்டது.