வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாக எவ்வித வாக்குமூலமும் இதுவரை பதிவாகவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி இருந்ததுடன் வவுனியா பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஆசிரியர், சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் மாணவியின் தந்தை ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும், அவ்வாறானதொரு பாலியல் துஸ்பிரயோகச் சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியும், அவரது தந்தையும் தெரிவித்ததாகவும், அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக எவரும் எமக்கு வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அதற்கான எந்தவொரு ஆதரமும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






