வவுனியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை பெற்றக்கொள்ள முடியவில்லை : சிறு வியாபாரிகள் விசனம்!!

603

வவுனியாவில் கிராமப்புறங்களில் கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாதள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது சிறுவியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என குற்றஞ்சாட்டினர்.

ஆட்டக்காரி, சிவப்பு நாடு, கோரா, வெள்ளை நாடு ஆகிய அரிசி வகைகள் 72 ரூபா கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. மொத்த வியாபாரிகள் மேற்குறிப்பிட்ட அரிசியை கட்டுப்பாட்டு விலையை மீறி 90 ரூபாவிற்கு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கிராமம்புறங்களில் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசியின் பெயர்களை மாற்றி மொத்த வியாபாரிகள் ரசீது வழங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக சிறு வியாபாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக விடயம் தெரியாத கிராமத்து சிறு வியாபாரிகள் அரிசியை கொள்வனவு செய்து அதிகவிலைக்கு விற்பதன் காரணமாக சட்டநடவடிக்கை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டபோதிலும் மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சிறு வியாபாரிகள் விசனம் வெளியிட்டனர்.

மட்டக்களப்பு பச்சையரிசியை மாத்திரம் விலைக்கட்டுப்பாட்டிற்கு விற்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பொன்னி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைநாடு போன்றவைகளையே விற்பனை செய்யக்கூடியதாக உள்ளது என சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் செய்தபோதும் சிறு வியாபாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டனர்.