வவுனியாவில் ‘இரண்டு உலக யுத்தங்கள்’ நூல் வெளியீடு!!

933

 
கலாபூசணம் இரா சுப்ரமணியம் எழுதிய ‘உலக யுத்தங்கள் 1,2’ என்ற நூல் நேற்று (09.07.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையை பெ.காமராஜ் வழங்க தலைமையுரையில் தமிழ் மணி அகளங்கன் ‘பாரதப்போரில் யுத்தத்தின் முடிவில் 10 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். உலக யுத்தங்களும் கோடிக்கணக்கான உயிர்களை காவு கொண்டவை, இதனை நூலாசிரியர் நினைவூட்டியுள்ளார்’ எனக்குறிப்பிட்டார் .

விசேட விருந்தினராகக்கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா வாழ்த்துரை வழங்கினார். ‘நூல் ஆசிரியர் இரா சுப்ரமணியம் நல்ல ஆற்றல்கள் கொண்டவர். பல நூல்களை வெளியிட்டு இருப்பவர். சமூக அக்கறையுடையவர் . அந்த வகையில் இந்த நூலும் அவரது ஆற்றல்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும்’ என்றார்.

பிரதம விருந்தினராக இலங்கைக்கான இந்தியத்துணைத் தூதுவர் ஆ.நடராஜன் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் ‘வடமாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு நூல் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நல்ல சமூக மாற்றத்தை காட்டுக்கிறது. பலர் இதனால் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்று கலாபூசனம் இரா சுப்ரமணியம் வெளியிடும் உலக யுத்தங்கள் பற்றிய நூல் காலத்தின் தேவையறிந்து வெளியிடப்படுகிறது. யுத்தங்களால் ஏற்பட்ட அழிவுகள் உயிரிழப்புகள் எவ்வாறானது என்பதை நாம் அறிந்து கொண்டால் இனி ஒரு உலக யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற உணர்வை சமூகம் புரிந்து கொள்ள உதவும்; ‘ என்றார் .

நூல் நயவுரையை இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன் வழங்கினார் . இதில் ‘ இரண்டு உலக யுத்தங்களும் நாடுகளுக்கிடையிலான சங்தேகத்தின் அடிப்படையிலேயே உருவாகின . முதலாம் உலக யுத்தத்தில் சரஜீவோ படுகொலை பாரிய விளைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் லுசிடானியா கப்பல் தாக்கி அழிக்கப்பட்டமை யுத்தத்தை பாரிய அழிவுக்கு கொண்டு சென்றது.

1918 ஆண்டு நவம்பர் மாதம் 11 மணிக்கு யுத்தம் நிறைவுக்கு வந்த போது சர்வதேச சங்கம் உருவானது. இந்த பிரேரனையை கொண்டு வந்த அமெரிக்காவே இச்சங்கத்தில் இணைய மறுத்தது. இதனால் சர்வதேச சங்கம் பலம் இழந்து இரண்டாம் உலகயுத்தம் 1939 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. ஹிட்லரின் எழுச்சி போலந்தை கைப்பற்ற தூண்டியது.; காலநிலையை சரியாகப்புரிந்து கொள்ள முடியாத ஜேர்மனி படைகள் ருஸ்யா நாட்டிற்குள் நுழைந்ததால் பாரிய தோல்வியை ஹிட்லர் சந்தித்தார் .

அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் மீதான யப்பானின் தாக்குதல் யுத்தத்திற்குள் அமெரிக்காவை இழுத்து வந்தது. நேச நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா ,ரஸ்யா, பிரான்ஸ் என்பனவும் அச்சு நாடுகளான ஜேர்மனி, இத்தாலி, யப்பான் போன்றனவும் கடுமையாக மோதிக்கொண்டன. இறுதியில் யப்பானை சரணடையுமாறு அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தது. சரணடைய மறுத்ததால் ஹீரோசீமா , நாகசாகி நகர்கள் மீது 1945 ஆகஸ்ட் 6ம் திகதி 9 ம் திகதிகளில் சின்னப்பையன் , தடித்தமனிதன் என்ற இரண்டு அனுகுண்டுகள் வீசப்பட்டன. யப்பான் சரணடைய 1945 ஒக்டோபர் 24 ஜ.நா சபை உருவாக்கத்துடன் யுத்தம் நிறைவுக்கு வந்தது ‘ என்றார் .

ஓய்வு நிலை கிராம சேவையாளர் த.தேவராஜா மற்றும் பாக்கியராஜா ஆகியோரும் நிகழ்வில் உரை நிகழ்த்தினர் . பல இலக்கிய ஆர்வலர்கள் வர்த்தகப் பிரமுகர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.