மத்திய அரசின் நிதியுதவியின்றி மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபையொன்றும் தனியரசல்ல!!

580

 
மத்திய அரசின் நிதியுதவியின்றி மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபையொன்றும் தனியரசல்ல. அல்லது சுயாட்சி அதிகாரமுடைய மாநிலமும் அல்ல. மத்திய மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு சபையே மாகாண சபையாகும்.

மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து மாகாணத்தின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும் போது மத்திய அரசுடன் தொடர்புகளை பேணுவதாக என்மீது துரோகிப்பட்டம் சாட்டப்படுகின்றது என்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டை மடத்துவிளாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற பாலர்பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண முத்திரை வரி வருமானத்தில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதிஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (13.07) மூன்று பாலர் பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மருக்காரம்பளை, கணேசபுரம், சாளம்பைக்கும் சோபாலர்புளியங்கும் மற்றும் பாலமோட்டை மடத்து விளாங்குளம் கிராமங்களிலேயே பாலர்பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. இங்கு மேலும் அமைச்சர் தெரிவித்ததாவது..

மாகாண சபை முறைமை அது இலங்கையில் அறிமுகப்படத்தப்பட்ட காலத்திலேயே விடுதலைப்புலிகளால் நிராகரிப்பட்ட ஆட்சிமுறையாகும். ஒருகையால் கொடுத்து மறுகையால் பறிக்கும் அதிகார பரவலாகல் முறையாகும். எனினும் நீண்டகால யுத்தத்தாலும் மனிதப்பேரவலத்தாலும் துவண்டுபோயுள்ள எமது மக்களுக்கு மூச்சுவிடுவதற்கு அல்லது இழைப்பாறுவதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமே மாகாண சபையாகும்.

மாகாண சபை தனியரசல்ல அல்லது சுயாட்சி அதிகாரம் பொருந்திய மாநில அரசமல்ல. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இயங்கும் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் சபை. இதற்கான அனைத்து செலவினங்களுக்கு மத்திய திறைசேரியே நிதியொதுக்கீடுகளை செய்கிறது. இந்த நிலையில் மாகாணத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மத்திய அரசின் நிதியுதவிகளுக்களை பெறுவதற்காக துறைசார்ந்த நிரல் அமைச்சுடன் தொடர்புகளை பேணுவது எந்த வகையில் பிழையாகும். அவ்வாறு செய்வதனால் எமது இறைமையை நாம் விட்டுக்கொடுப்பதாக கருதமுடியாது.

வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மாகாண சுகாதார சேவை பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுகாதார சேவையின் தரம் அதிகரித்துள்ளது.

நகரங்களை அண்டியதான சுகாதார சேவை தற்பொது கிராமங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலிருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் பாரிய நிதியுதவியுடன் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் காலங்களில் விசேட வைத்திய சிகிச்சைப்பிரிவுகளை ஆரம்பிக்கவுள்ளோம். குறிப்பாக நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் வவுனியாவில் இருதய சத்திரசிகிச்சைப்பிரிவும் மன்னாரில் சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப்பிரிவும் கிளிநொச்சியில் பெண்ணியல் நோய்களுக்கான விசேட சிகிச்சைப்பரிவும் முல்லைத்தீவில் அங்கவீனர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வுப்பிரிவும் யாழ்ப்பாணத்தில் அவசர விபத்து சேவை நிலையங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2020ம் ஆண்டளவில் வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் எமது மாகாணத்திலேயே தங்களுக்கான அனைத்து சுகாதார தேவைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படும்

இதற்கான பூரண அனுசரணையை மத்திய சுகாதார அமைச்சு வழங்கி வருகின்றது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து மாகாணத்தின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும் போது மத்திய அரசுடன் தொடர்புகளை பேணுவதாக என்மீது துரோகிப்பட்டம் சாட்டப்படுகின்றது என்றார்.