பெற்ற மகன்கள் செய்த செயலால் உயிரை விட்ட பெற்றோர்!!

541

கடன் பெற்று இரு மகன்களுக்கும் வீடு கட்டி தந்த நிலையில், மகன்கள் கடனை கட்ட மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பு.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (65) இவர் மனைவி ரெங்கநாயகி (60). இவர்களுக்கு சிவானந்தம் (40) பரமானந்தம் (35) என்று இருமகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கந்தசாமி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தனது இரண்டு மகன்களுக்கும்‌ வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கான மாதத் தவணையை கந்தசாமியே செலுத்தி வந்த நிலையில், அவரு‌க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் மீதி பணத்தை கட்ட முடியாமல் கந்தசாமி திணறியுள்ளார். மேலும், தன் மகன்கள் கடனை கட்டிவிடுவார்கள் என நினைத்துள்ளார்.

ஆனால், மகன்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக தந்தை வாங்கிய கடனைக் கட்ட அவர்கள் இருவரும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கந்தசாமியும் அவரது மனைவி ரெங்கநாயகியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.